முதலடி 13: அற்புதங்களை செய்யும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து

முப்பது வயதாக இருக்கும் பொழுது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஊழியம் செய்ய வீட்டை விட்டு வெளியேறினார்.

நாமும் அவருடைய சீடர்களாக அவர் போகிற இடத்திற்கு போகவும், அவர் சொல்வதை கேட்கவும், அவர் செய்வதை பார்க்கவும் செல்வோமா? இது எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறதோ அப்படியே உனக்கும் நிச்சயமாக இருக்கும்.

இயேசுவானவர் எல்லா ஊர்களுக்கும் சென்று தேவனுடைய ராஜ்யத்தை பற்றி கூறினார்.  எல்லா மனிதர் மேலும் இரக்கம் காட்டினார். சுகவீன பட்டவர்களை, குஷ்டரோகிகளை, கண் பார்வையற்றவர்களை, பேச முடியாதவர்களை, நடக்க முடியாத யாவரையும் சுகப்படுத்தினார். அசுத்த ஆவிகளை துரத்தினார். எல்லா நேரமும் மக்கள் அவரை தேடி வந்தனர்.

விதவையாகியஒரு பெண் இறந்த மகனை அடக்கம் செய்ய கொண்டு போகும் போது இயேசு மனதுருகி பார்த்தார். அவள் துக்கத்தால் அழுது கொண்டிருந்தாள். அந்த மகனின் உடலை தொட்டு உயிரோடு எழுப்பினார். அந்த தாய் இப்பொழுது சந்தோஷத்தால் கண்ணீர் விடுகிறாள்!

மற்றும் ஒரு நாள் அவரை பின்பற்றி வந்த மக்கள் பசியோடு இருப்பதை அறிந்தார். ஐயாயிரம் மக்களுக்கு மேல் இருந்தனர். பசியோடு அவர்களை அனுப்ப மனமில்லாமல் ஒரு சிறுவன் வைத்திருந்த உணவை ஆசீர்வதித்து அவர்களுக்கு கொடுத்தார். யாவரும் திருப்தியாக சாப்பிட்டு மீதியும் எடுத்தார்கள்.

ஒரு சமயம் கலிலேயா கடலில் பிரயாணப்படும் பொழுது கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது.  அவருடைய சீடர்கள் பயந்தனர். அப்பொழுது இயேசு காற்றையும் கடலையும் அதட்டியவுடன் அது அமைதியாகி விட்டது. மற்றும் ஒரு நேரம் அவருடைய சீடர்கள்  படகில் இருக்கும் பொழுது இயேசு கடலின் மேல் நடந்து அவர்களிடம் வந்தார்.

இயேசு மனிதர்களுடைய பாவங்களையும் மன்னித்து அவர்களை சுகமாக்கினார். சரீரத்தில் சுகம் பெறுவதை காட்டிலும் பாவங்கள் மன்னிக்க படுவது முக்கியம் என்று கூறினார். அவரை தேடி வந்த எல்லாருடைய பாவங்களையும் மன்னித்து அவர்கள் வாழ்க்கையில் மாற்றங்களை உண்டாக்கினார். வரி வசூலித்து மக்களை ஏமாற்றி கொண்டிருந்த ஒரு மனிதன், விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட பெண், மத தலைவர்கள்  மற்றும் அநேகர் அவரிடம் வந்து பாவ மன்னிப்பு பெற்று புது வாழ்வு அடைந்தார்கள்.

ஆண்டவராகிய இயேசு அனேக அற்புதங்கள் செய்து தம்மை கடவுளாக வெளிப்படுத்தினார். நான் இயேசு கிறிஸ்துவை உலகிற்கு வந்த கடவுளாக நம்புகிறேன். அன்பான நண்பனே, நீயும் நம்புகிறாயா?

ஜெபம்: “அன்பான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, அற்புதங்கள் செய்யும் தேவனே! உம்முடைய மகத்தான அன்பிற்காக நன்றி செலுத்துகிறேன். ஆமென்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *