முதலடி 18: தேவனாகிய பரிசுத்த ஆவியானவர் – நம் உதவியாளர், வழி காட்டுபவர்

சிலுவை மரணத்தை சந்திக்கும் முன்னர் ஆண்டவர் இயேசு தம்முடைய சீடர்களுக்கு பின் வருமாறு கூறினார் சத்திய ஆவியாகிய அவர் வரும் போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்” யோவான் 16:13

ஆண்டவர் இயேசு பரலோகத்திற்கு சென்ற பின் அவருடைய சீடர்களுக்கு பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார். பரிசுத்த ஆவியை பெற்று கொண்ட பின், சீடர்களுக்கு ஆண்டவர் யேசுவுக்காக வாழ கூடிய தைரியமும், ஞானமும் இயேசுவை பற்றி உலகத்தின் மக்களுக்கு கூற தைரியமும் வந்தது.

பரிசுத்த ஆவியானவர் நமக்கு எப்படி வழி காட்டுகிறார்?

என்னுடைய வாழ்க்கையை ஆண்டவர் இயேசுவுக்கு கொடுத்த பின் பரிசுத்த ஆவியானவருடைய மெல்லிய சத்தத்தை என்னுடைய இருதயத்தில் கேட்டேன்.

தவறு செய்ய நினைக்கும் பொழுது என்னை எச்சரிக்கிறார். தேவனை நோக்கி சரியான திசையில் என்னை நடத்தி செல்லுகிறார். என்னுடைய பழைய பாவங்களை நினைப்பூட்டி மனம் திரும்புதலுக்கு என்னை நடத்துகிறார் (மனம் திரும்புதல் செய்த தவறுகளுக்கு மனம் வருந்தி அதை விட்டுவிட தீர்மானிப்பது). ஒவ்வொரு தவறுக்கும் தேவனிடம் மன்னிப்பு கேட்க வைக்கிறார்.

எனக்கு தேவையான வேத வார்த்தைகளை காண்பிப்பார். அந்தந்த நாளின் சூழ்நிலைக்கு தேவையான வழி நடத்துதலை வேத வசனங்கள் மூலம் பெற்று கொள்வேன். எப்படி, எதற்க்காக ஜெபிக்க வேண்டும் என்பதை கற்று கொடுப்பார். வேதத்தில் கூறப்பட்டிருக்கும் உண்மைகளை எனக்கு போதிப்பார். தெளிவாக அறிந்து கொள்ள என்னுடைய இருதயத்தை தெளிவாக்கி நன்கு விளங்கும்படி செய்வார்.

சுகவீனப்படும் போது, தனிமையாக இருக்கும் போது, துக்கப்படும் போது என்னை ஆறுதல் படுத்துவார். மிகவும் பலவீனப்பட்ட நேரத்திலும் இருதயம் உடைக்கப்படும் நிலையில் இருக்கும் பொழுதும் எனக்காக பரிசுத்த ஆவியானவர் பிதாவினிடத்தில் வேண்டுதல் செய்வார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பற்றியும் அவர் எனக்கு செய்கிற நன்மைகளை பற்றியும் மற்றவர்களுக்கு நான் சொல்ல நினைக்கும் பொழுது பரிசுத்த ஆவியானவர் எனக்கு வேண்டிய தைரியத்தை கொடுக்கிறார், நான் எப்படி அவர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்பதற்கும் எனக்கு உதவி செய்கிறார்.

தேவனால் நமக்கு கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் எவ்வளவு அருமையான பரிசு! நம்முடைய வாழ்வின் போராட்டங்களில் அவர் நம்மை தனியே விடுவதில்லை. எப்பொழுதும் நம்மோடு இருக்கும் படியாக பரிசுத்த ஆவியானவரை தந்திருக்கிறார்.

ஜெபம்: “பரிசுத்த ஆவியானவரே, எப்பொழுதும் என்னோடிருந்து என்னை வழி நடத்தும். எப்பொழுதும் உம்முடைய  மெல்லிய சத்தத்தை கேட்டு அதற்க்கு கீழ்படிய உதவி செய்யும். ஆமென்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *